பனிமலர்

பனிமலர்
பனிமலர்

Friday, December 27, 2024

அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் வன்முறை...

இதில் எல்லோரும் மறந்த இரு விடயங்கள்.அவைகளை நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். 1. காதல் என்பது ஒரு இயல்பான உணர்வு. காதலர்கள் தம் இணையுடன் முழு நம்பிக்கை ஏற்படாதவரை உடல் ரீதியாக காதல் வயப்படுவதை தடுக்க வேண்டும். அப்படியே அது நடந்தாலும் அதையே குற்றவுணர்வாக்கி அதை காதலர்களின் பெற்றோரிடம் சொல்வேன் என்று மிரட்டி தம் பாலியல் இச்சைக்கு இணங்க வைக்கும் சமூக விரோதிகளின் வலையில் வீழ்வதை விட பெற்றோர்களிடம் தாம் உடல் ரீதியாக காதல் வயப்பட்டு விட்டேன் என்று தெரிவித்து விடுவது எவ்வளவோ பரவாயில்லை. அதை வீட்டில் சொன்னால் எதிர்கொள்ளும் பெற்றோர்கள், காதலர்களுக்கு உடலின்பம் தேடுவது இயற்கையின் உந்துதல் தான் என்பதை புரிந்துக்கொண்டு தத்தம் குழந்தைகளுக்கு அறிவுரைகள் வழங்கி அனுப்புவது இது போன்ற சமூக விரோதிகள் குழந்தைகளிடம் பாலியல் சுரண்டலுக்கு அழைப்பு விடுக்கும்போது எதிர்கொள்வது எளிதாக இருக்கும். அதை தவிர உடலில் இல்லை மானம், அது உணர்வு சார்ந்தது என்ற தெளிவை நம் சமூகத்திற்க்கு ஏற்படுத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது. "பாபநாசம்" போன்ற திரைப்படங்களில் காட்டப்படும் பாலியல் சுரண்டல்கள் பெரும்பாலும் பெண்ணின் உடலை வைத்து "மானம் போய்விட்டதாக" பெண் கருதும் எண்ண நிலைக்கு இழுத்து செல்கின்றனர். வெளி நாடுகளில் சூரிய குளியல் கடற்கரைகளில் பெண்கள் தாம் பிறந்த மேனியுடன் இருப்பதை அந்த சமூகங்கள் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் இங்கு பெண்ணின் உடலை அவளின் அனுமதி இல்லாமல் படம் பிடித்தால் கூட அதற்கு அப்பெண்ணின் மானம் போய்விட்டதாக கருத அவளே தலைப்படுகிறாள். 2. இந்த விடயத்தில் பலிகடா ஆக்கப்பட்ட அப்பெண்ணின் காதலன், ஒரு ஆண்மை உள்ளவனாக அப்பெண்ணை விருப்பமற்ற உறவுக்கு உட்படுத்தப்படும்போது கொதித்து எழுந்து போராடியிருக்க வேண்டும். இதுவே மாநிலக்கல்லூரி அல்லது பச்சையப்பன் கல்லூரி மாணவனாக இருந்தால் போராடியிருப்பான். நன்றாக படிக்க வைக்கிறேன் என்று நம் குழந்தைகளின் வீரத்தை அறவே அழித்து விடுகிறோம். வீரமற்ற கல்வியால் ஒரு பயனும் இல்லை.

Wednesday, November 13, 2024

கலைஞர் திரு. கருணாநிதி அவர்கள்

எதை தம் அரசியலுக்கு கருவியாக பயன்படுத்தினாரோ அதை வைத்தே இன்று ஓரங்கட்டப்படுகிறார். அன்று தமிழ், தமிழென்று காணும் இடமெல்லாம் "தமிழ் மொழி வாழ்க" என்று மக்கள் மனத்தில் ஒரு முட்டாள்தனத்தை விதைத்தார். இன்று ஒரு அயோக்கியன் சில சாதிகள் இந்நிலபரப்பிற்கே உரிய சாதிகள் என்று கூறிக்கொண்டு கலைஞர் தமிழ் சாதியை சேர்ந்தவர் இல்லை என்று கூறுகிறான். மொழி என்பது மற்றவர்களோடு தொடர்பு கொள்ளவும், கலை உணர்வை வெளிப்படுத்தவும் பயன்படும் ஒரு கருவியே அன்றி அதனால் ஒரு அடையாளமும் நமக்கு தரமுடியாது என்பதை பெரியாரின் வழி நின்று தெளிவு படுத்தட்டும். வெறும் மொழி மட்டுமே நமக்கு எந்தவித பெருமிதத்தையும் தராது. அது தூக்கி செல்லும் சிந்தனை தான் முக்கியமே தவிர மொழி என்னும் கருவியை தூர தள்ளுவோம். 

Tuesday, October 29, 2024

விஜயின் அரசியல் நுழைவு

அரசியல் தற்குறி என்று விஜயை அழைப்பதற்க்கு முன்னால் அவருடைய தந்தை சந்திரசேகரை தான் அழைக்கவேண்டும். அவர் தான் இந்த அரிதாரம் விஜய்க்கு நன்றாக வரும் என்று ஆருடம் கூறியிருக்க அதிக வாய்ப்பு கொண்டவர். இவர்களை போன்றோர் எல்லோரும் எண்ணுவது அரசியல் என்பது பணம் நிறைய கைகளில் இருக்கும்போது செய்யப்படும் மற்றுமொரு முதலீடு என்பது தான். அரசியல் எனும் வார்த்தையின் அடிப்படை பொருள் சமூக சிந்தனை, தியாகம், மற்ற உயிர்களை தம் உயிர் போல் எண்ணி பரிவு கொண்டு அதன் வலிகளுக்கு சமூகத்தில் தீர்வு தேடுவது போன்றவை தான். ஆனால் ஏதோ புதிய வேலைக்கு எண்ட்ரி கொடுப்பது போல இன்றிலிருந்து நான் அரசியல்வாதி என்று சொல்வது நம் மக்களை அடி முட்டாளாக கருதுவது போன்றதாகும். இந்த முட்டாள் மக்களுக்கு நம் பிரச்சனைகள் எதுவென்றே இன்னமும் தெரியவில்லை. ஊழல் என்று இவர்கள் கூறுவது இன்று எல்லா தரப்பு மக்களும் ஈடுபடும் பொருளாதார திருட்டு. ஒரு குறிப்பிட்ட சமூகம் மட்டும் இதே பொருளாதார சுரண்டலை செய்ய எந்தவித குற்றவுணர்வுமே இல்லாமல் அதை செய்வதற்க்கு சமூக சட்டவிதிகளை கடவுள், ஆன்மீகம் என்கிற பெயரில் வடிவமைத்துக்கொண்டு அது ஏதோ தம் அடிப்படை உரிமை என்பது போலவும், சுரண்டப்படும் மக்கள் அவர்களுக்கு தம் பொருளாதாரத்தையும், பொருளாதார‌ உரிமைகளையும் கொடுப்பது தம் கடமை போலவும் மாற்றி வைத்திருக்கிறது. இது மேலே சொன்ன வெறும் பொருளாதார திருட்டு என்னும் ஊழலை விட சமூகத்தில் அடிமைத்தனத்தை நம் மீது சுமத்துகிறது. இதை அடிப்படையாக பேசாமல் ஊழலை மட்டும் பிரதானமாக பேசும்படி அந்த சுரண்டும் சமூகம் நம்மை மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறது.